TamilKushi.com Login and Register
Register
Drona's Corner

இந்தப் பதிவுகளில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மிகப் பெரும் ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், மதகுருக்கள் போன்றவர்களைப் பற்றியும் அவர்கள் நமக்களித்த பல செல்வங்கள் பற்றியும் சொல்ல விழைகிறேன்!! இதன் பொருள் இந்த ஞானிகளும், அவர்களின் வாழ்வும், அவர்கள் நமக்களித்த பெரும் ஞான நூல்களும் தான் ஹிந்து மத செல்வங்கள்!! இவைகளை வெறும் கதை வர்ணனைகளாக மட்டுமின்றி தர்மத்தின் ஒப்பீடும் இடையிடையே (CORRELATION) இருக்கும்! அது மட்டுமல்ல ஹிந்து மதத்தில் உள்ள மிகப் பெரும் மறைந்த அறிவியல் உண்மைகள், நூல்கள், மற்றும் அனைத்து விதமான ராஜநீதி, ஜோதிடம், வான சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் போன்ற அனைத்தையும் பற்றி இந்தப் பதிவுகள் சொல்லும்!! இந்தப் பதிவை விரும்பும் தாய்மார்கள் குழந்தைகளை இதைப் படிக்கச் சொன்னால் அவர்களுக்கு நமது மதம் பற்றிய தெளிவான பார்வை வர உதவலாம்! இது ஓரளவே காலக் கணக்கை அனுசரித்து இருக்கும்! இருந்தாலும் வேதகாலங்கள், இதிகாசங்கள் ஓரளவும் அதைத் தாண்டிய காலகட்டத்தில் ஓரளவும் கலந்து தர விழைகிறேன்! இன்று நான் மிகவும் விரும்பும் பாத்திரமான துரோணாச்சாரியார் பற்றி சில பதிவுகளில் சொல்ல விழைகிறேன்!!

மாகாபாரதம் மற்றும் ராமாயணத்தைக் கற்பனை என்றும் அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் பொய் எனவும் சொல்பவன் முட்டாளாகத்தான் இருப்பான் என்று சான்றுரைப்பது தொல்பொருள் ஆய்வுகள்!! அதனால் துரோணர் என்பவர் கற்பனைப் பாத்திரமல்ல!! உண்மையான ஒரு குரு!!

பாரத்வாஜ மகரிஷியின் புதல்வராகப் பிறந்த துரோணர் சிறு வயதில் தன் தந்தையிடம் கல்வி கற்றபின் பரசுராமரின் புகழைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் போய்ச் சேர்ந்தார்!! பரசுராமர் அப்போது தன் போர்க்கருவிகளை எல்லாம் துறந்து தவ நிலைக்கு தென்னாடு செல்லும் நிலையில் இருந்தார்! தனக்கு ஒரு வாரிசு போல துரோணர் இருந்ததை சோதித்து அறிந்த பரசுராமர் மிக்க மகிழ்வுடன் துரோணரைத் தன் சீடராக ஏற்று அவருக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்து தன்னுடைய திவ்யாஸ்திரங்கள் அனைத்தையும் (முக்கியமாக பிரம்மாஸ்திரம்) அவருக்கு வழங்கி ஆசிதந்து விட்டு தென்னாடு ஏகிப் போனார்!

பின்னர் கவுரவ சபையின் ஆஸ்தான குலகுருவான கிருபாச்சாரியாரின் தமைக்கையான கிருபியை மணந்து அஸ்வத்தாமனைப் பெற்றார்! பின் அவர் வாழ்வில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது! குடும்பம் என்றான பின் செல்வம் தேவையாகிப் போனது! அவருக்குக் குழந்தைக்குத் பால் தர ஒரு பசுவும் கூட இல்லாமல் போனதாக இலக்கியங்கள் சொல்கின்றன!

இந்நிலையில் தன் தந்தையிடம் சீடனாகவும் தனக்கு உற்ற பால்ய சினேகிதனாகவும் இருந்த துருபத மன்னனின் நினைவு துரோணருக்கு வந்தது! சிறுவயதில் காட்டில் ஒன்றாகத் திரிகையில் ஒரு ஒரு புலியின் தாக்குதலில் இருந்து துருபதனைக் காப்பாற்றினார் துரோணர்! அன்று சிறுவனான துருபதன் தான் அரசனானவுடன் தன் ராஜ்யத்தில் பாதியைத் துரோணருக்கு தருவதாக வாக்களித்தான்! அந்த வாக்கு நினைவுக்கு வந்த சூழலில் மன்னனைச் சந்திக்கப் போனார் துரோணர்! சென்ற இடத்தில் சரியான வரவேற்பு இல்லை! என்ன வேண்டும் என்று ஆணவமாகக் கேட்டான் துருபதன்! அவன் வாக்கை நினைவுபடுத்திய துரோணரைப் பார்த்து எள்ளி நகையாடினான்! ‘’நீர் முதலில் என்னை சிநேகிதன் என்று வர்ணித்துக் கொள்ள தகுதியற்ற ஏழை பிராமணன்! ஒருவன் அரசனைச் சிநேகிதன் என்று வர்ணிக்க சமதகுதி தேவை! உனக்கு அது இல்லை! முட்டாளே சிறு வயதில் சொன்ன விஷயமெல்லாம் உண்மையாகி விடுமா?அப்படியெல்லாம் எதுவும் தர முடியாது’’ என இகழ்ந்தான்! கொஞ்சம் கோபமடைந்த துரோணர் பொறுமையுடன் மகனுக்குப் பால் தர பசு ஒன்றையாவது தர வேண்டினார்! அதையும் அவன் ஏற்காமல் எள்ளி நகையாடவே அவமானத்துடன் திரும்பினார்! அன்று அவர் மனதில் துருபதனைப் பழிவாங்கும் வன்மம் எழுந்தது! இது சொல்லும் பாடம் எத்தனைதான் மேலோராக இருந்தாலும் காரணமின்றி இகழப்படும் பட்சத்தில் பழிவாங்கும் உணர்வே தோன்றும் என்பதே!!

பின்னர் துரோணர் மனைவியுடன் கிருபர் வீட்டில் வந்து தங்கியிருக்க ஒரு நாள் கவுரவர் பாண்டவர் பந்து விளையாடும் இடத்துக்கு சென்றார்! அப்போது அவர்கள் ஒரு கிணற்றின் அருகே நின்றிருந்தனர்! துரோணர் விசாரித்தபோது பந்து கிணற்றில் விழுந்து விட்டதால் எப்படி எடுப்பதெனத் தெரியாது நிற்பதாக அறிந்து சிரித்தார்! அரச குடும்பத்தைச் சேர்ந்த உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்று கேட்டு தன் கைவிரலில் இருந்த மோதிரத்தைக் கிணற்றில் போட்டார்! பின் ஒரு காய்ந்த அருகம்புல்லை எடுத்து சில மந்திரங்கள் ஜெபித்து கிணற்றில் போட அது நேராகப் போய் அவர் மோதிரத்தில் குத்தி அதை மேலேடுத்து வந்தது! அப்புறம் பந்தையும் எடுத்துத் தந்தார்!

ஆச்சரியம் அடைந்த இளவரசர்கள் பாட்டனார் பீஷ்மரிடம் இது குறித்து சொல்ல அவர் உடன் அது துரோணராகத் தான் இருக்க முடியும் என்று உணர்ந்து அவரைக் கூட்டி வரப் பணித்தார்! வந்த துரோணரிடம் பீஷ்மர் அவரை கவுரவர் பாண்டவருக்கு குருவாக இருக்க வேண்ட ஒத்துக் கொண்ட துரோணர் அன்று முதல் ஹஸ்தினாபுரத்தின் முக்கிய அங்கமாகிப் போனார்!! கவுரவர் பாண்டவருக்கு கல்வி, போர்முறைகள் பயிற்சியைக் கொடுத்த துரோணர் பின்னர் பாண்டவர்கள் மூலம் துருபதன் மேல் உள்ள வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார்! அது எப்படி என்பதையும் அந்த நிகழ்வால் துரோணரின் மரணத்துக்கான வழி எப்படிப் பிறந்தது என்பதையும் தொடரும் பதிவுகளில் சொல்கிறேன்!! 


footer